Wednesday, 10 September 2014

முகநூல் காட்டும் முகம்


முகநூல் காட்டும் முகம்

 








இன்று நீங்கள் தும்மினால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியுமோ தெரியாது உலகம் முழுதும் தெரிந்துவிடும். ஃபேஸ்புக் அக்கவுண்ட் மட்டும்தான் தேவை.
செல்ஃபி தீவிரவாதிகள்
பலருக்கு இன்று முகநூல் இல்லாவிட்டால் கை நடுக்கம் வருகிறது. எதாவது செய்து கவன ஈர்ப்பு செய்ய வேண்டிய நெருக்கடி இவர்களுக்கு.
சிலருக்கு சொந்தச் சரக்கு தீர்வதில்லை. இவர்கள் செல்ஃபி தீவிரவாதிகள். ஷங்கர் பட நாயகர்களாக சமூகக் கோபம் கொப்பளிப்பார்கள். இவர்கள் ஆளுக்கு ஒரு மாநிலமாய் ‘ஒரு நாள் முதல்வர்கள்’ ஆனால் இந்தியா வரும் வியாழக்கிழமைக்குள் வல்லரசாக ஆகும் என தோன்றும். முக நூலின் ஆக்ஷன் ஹீரோக்கள் இவர்கள்.
“லைக்குகள்” வியாபாரம்
சொந்தச் சரக்கு இல்லாதவர்களுக்கு ஒரே தாரக மந்திரம்: “திரட்டு அல்லது திருட்டு”. இவர்கள் முழு நேரம் வலை வீசி “அட!” போட வைக்கும் விஷயங்களைக் கொண்டு பகிர்வார்கள். கேப்டன் காமெடி, தலாய் லாமா பொன்மொழி, சமகால நிகழ்விற்கு வடிவேல் வசனம் என டாபிக்கலாக இருக்கும்.
இவற்றுக்கு பதியும் “லைக்குகள்” சமூக அந்தஸ்த் தின் பிரதிபலிப்பு. லைக்குகள் கிடைக்கப் பலர் செய்யும் பிரம்மப்பிரயத்தனங்கள் சுவாரசியமானவை. ஆனால் லைக்குகள் அதிகம் பெற்றுத்தர பல வியாபார சேவை நிறுவனங்கள் உள்ளதாக சென்ற ஆண்டு என் மும்பை நண்பர் சொன்ன போது தான் இதன் வியாபார முகம் புரிந்தது.
சமூக ஊடக ஜன்னல்கள்
ஃபேஸ்புக், லிங்கிட் இன், ட்விட்டர் போன்றவைகளில் உங்கள் பங்கீடுகள் உங்களை உலகம் அறிய வைக்கும் ஜன்னல்கள். வேலை தேடுவோர், ஆட்கள் தேடுவோர், தொழில் முனையத் தேடுவோர், ஜோடி தேடுவோர் என அனைவரும் முதலில் நோக்குவது உங்கள் சமூக வலை தளப்பக்கங்களைத் தான்.
வேலை தேடுவோர், வேலை மாற்ற நினைப்போர் அனைவரும் தங்கள் வலை தளப் பக்கங்களை கண்காணித்தல் நல்லது.
இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வலை தள வியாபாரத்தை விருத்தி செய்யப் பார்க்கின்றன. மற்ற வடிவங்களில் வியாபாரம் செய்தாலும் கம்பனி வெப்சைட்டும், ஃபேஸ்புக், லிங்கிட் இன் பிஸினஸ் பக்கங்களும் இன்று அவசியம்.
லிங்கிட் மூலம் வேலை
சென்னையைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனம் தன் ரெக்ரூட்மெண்ட் பணியில் மூன்றில் ஒரு பங்கை லிங்கிட்- இன் மூலமாகச் செய்வதாகக் கூறுகிறது. செலவும் குறைவு, நம்பகத்தன்மையும் அதிகம்.
உங்களைப் பற்றிய நிஜக் கருத்துக்கள் அறிய உங்கள் வலை தளப் பதிவுகளை ஆராய்கிறார்கள். தொழில் நுட்பம் இன்று யாரையும் யாரும் தொடும் தூரத்தில் வைத்துள்ளது.
அதனால் சில பால பாடங்கள் வேலை தேடுவோர், வேலை தாவுவோர் அனைவருக்கும் தேவை .
உங்கள் படம் முகம் தெரிவதாக இருக்கட்டும். அது நிஜ பிம்பத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கட்டும். அஞ்சான் சூர்யா, பையா தமன்னா படங்களில் மறைந்துகொள்ளாதீர்கள். அது உங்கள் தன்னம்பிக்கைக் குறைவைக் காட்டும்.
உங்கள் படிப்பு, சொந்த ஊர், வேலை, பணி அனுபவம், பொழுதுபோக்குகள் போன்றவை முழுதாக இருத்தல் நலம். முக்கியமாக நிஜமாக இருக்கட்டும். முகநூல் உங்கள் பர்சனல் பக்கம் என்றால் லிங்கிட் - இன் அஃபிஷியல் பக்கமாக இருக்கட்டும். இரு பக்கத் தகவல்களும் ஒத்துப் போக வேண்டும்.
நீங்கள் விரும்பிப் பகிரும் செய்திகள் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். உங்கள் படிப்பு, வேலை, தொழில் அனுபவம் சார்ந்த பதிவுகள், உங்கள் மேல் ஈர்ப்பை ஏற்படுத்தும். உங்கள் தொழிலில் உங்களுக்கு உள்ள திறனையும் விருப்பத்தையும் தெரியப்படுத்தவும். உங்களை தேர்வு செய்வோருக்கு அது உதவும்.
நீங்கள் பங்குகொள்ளும் குழுக்கள் என்ன? அதன் குறிக்கோள்கள் என்ன? அதில் உங்கள் பங்களிப்பு என்ன? உங்கள் நோக்கங்களை அவை பிரதிபலிக்கின்றனவா? இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் தொழில், வாழ்க்கை இரண்டுக்கும் முக்கியமாகப் படும் குழுக்களில் மட்டும் சேருங்கள்.
உங்கள் நண்பர்கள், தொடர்புகளின் தரம் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தைப் பாதிக்கும். எண்ணிக்கையைவிடத் தரம் முக்கியம்.
லிங்கிட் இன்னில் உங்களைப் பற்றிய முக்கியஸ்தர்களின் பரிந்துரைகள் நன்மை சேர்க்கும். அதனால் துறை சார்ந்த வல்லு நர்கள் தொடர்புகளும் அவர்கள் பரிந்துரைகளும் அவசியம். அவற்றை நாடிச் செல்வது நல்லது.
உங்கள் வலைத் தளப் பக்கங்கள் சுய விளம்பரம் போல இல்லாமல் உங்களைப் பற்றியச் சரியான மதிப்பீட்டை உருவாக்குகின்றனவா என்று தொடர்ந்து கண்காணியுங்கள்.
அகத்தின் அழகு முகநூலில்
தனி மனிதர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சமூக ஊடகங்கள் எப்படியெல்லாம் உதவலாம் என்று இன்று ஆலோசனைகள் கிடைக்கின்றன. உங்கள் வலைதளப் பக்கங்களைச் சீரமைப்பதின் மூலமாக உங்கள் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும். நிறுவனங்கள் தங்கள் வியாபாரத் தேவைகளுக்காக சமூக ஊடக வியூகங்களை மாற்றி அமைக்கின்றன. கட்சிகளும் இயக்கங்களும்கூட வலை தளங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றன.
நீங்கள்?
உங்கள் வேலை, தொழில், பிற நாட்டங்கள் என அனைத்து செயல்பாடுகளையும் உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் சரியாகக் காண்பிக்கின்றனவா?
அகத்தின் அழுகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி!
அகத்தின் அழகு முகநூலில் தெரியும் என்பது புது மொழி!

கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்வுகள்

கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்வுகள்

 

நீர்மப் (Fluid) பொருட்களை வெப்பமேற்றிக் காய்ச்சுவதற்கு அதிக அழுத்தம் கொண்ட கொதிகலன்கள் (Boiler) பயன்படுத்தப்படுகின்றன. இரும்பு அல்லது எஃகு கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கொதிகலன்களை இயக்கும் பணியில் பாதுகாப்புகள் அவசியமானதாக இருக்கின்றன. எனவே, கொதிகலன் பயன்பாட்டுப் பணிகளில் “கொதிகலன் பணியாளர் தேர்வுகள்” எழுதித் தேர்ச்சி பெற்றவர்களே நியமிக்கப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் தேர்வு
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கொதிகலன் இயக்ககம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இத்தேர்வுகளை நடத்துகிறது. இத்தேர்வுகள் இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதி, முதல்நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதி எனும் இரு நிலையிலான தகுதிகளுக்கான தேர்வுகளாக நடத்தப்படுகின்றன.
இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர்
இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுத விரும்புபவர்கள் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
1.பதினெட்டு வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
2.பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.நீராவிக் கொதிகலன் பணிகளில் தீயணைப்பாளர் (Fireman), இயக்குபவர் (Operator), உதவித் தீயணைப்பாளர் (Assistant Fireman), உதவி இயக்குபவர் (Assistant Operator) எனும் பணியில் இரண்டு வருடங்களுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
(அல்லது)
கொதிகலன் உற்பத்தி அல்லது நிறுவுதல் அல்லது பராமரிப்புப் பணியில் பொருத்துநராக மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்றியிருக்க வேண்டும். அத்துடன் ஓராண்டுக்குக் குறையாமல் உதவித் தீயணைப்பாளர் (Assistant Fireman) பணியில் பணியாற்றி இருக்க வேண்டும்.
(அல்லது)
தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்கள் இரண்டு வருடங்களுக்குக் குறையாமல் சிறுதொழில் நிறுவனங்களில் கொதிகலன் பணியில் பணியாற்றி இருக்க வேண்டும்.
முதலாம் நிலைக் கொதிகலன் பணியாளர்
முதலாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தேர்வு எழுத விரும்புபவர்கள் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
1.இருபது வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
2.இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்ச்சிக்குப் பின்பு ஐம்பது சதுர மீட்டருக்குக் குறைவில்லாத மேற்பரப்பு கொண்ட கொதிகலன் இயக்கும் பணியில் தனிப்பொறுப்புடன் இரண்டு வருடங்களுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
(அல்லது)
மூன்று வருட கால அளவிலான தொழிற்படிப்பில் தேர்ச்சி பெற்று, கொதிகலன் பயன்படுத்தும் அல்லது கொதிகலன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒரு வருடம் தொழிற்பழகுநராகப் பயிற்சி பெற்று, இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழுடன் ஐம்பது சதுர மீட்டருக்குக் குறைவில்லாத மேற்பரப்பு கொண்ட கொதிகலன் இயக்கும் பணியில் தனிப்பொறுப்புடன் இரண்டு வருடங்களுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
(அல்லது)
இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழுடன் தீயணைப்பாளர் (Fireman) அல்லது உதவித் தீயணைப்பாளர் (Assistant Fireman) பணியில் முதலாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்றவரின் கீழ் ஐம்பது சதுர மீட்டருக்கு மேலான மேற்பரப்பு கொண்ட கொதிகலன் இயக்கும் பணியில் இரண்டு வருடங்களுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுகள்
கொதிகலன் பணியாளர் தேர்வுக்கான அறிவிப்புகள் ஆண்டுதோறும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் செய்தித்தாள்களில் வெளியிடப்படுகின்றன. இத்தேர்வுகள் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நடத்தப் பெறுகின்றன

 

இணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி

கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது.
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன. பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள் எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் பயிற்சி (Intermediate Course), மேம்பட்ட பயிற்சி (Advanced Course), சிறப்புநிலைப் பாடங்கள் (Specialty Lessons), என பல தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.
தொடக்கநிலைப் பயிற்சியில் விசைப்பலகையிலுள்ள விசைகளைப் பயன்படுத்துவதற்கான ஒன்பது வகையான தொடக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பயிற்சிக்கு நாம் ஒவ்வொரு விசைக்கும் பயன்படுத்த வேண்டிய விரல்கள் குறித்தும், அதற்கான எழுத்துகள் குறித்தும் எளிமையாகப் படத்துடன் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இடைநிலைப் பயிற்சியில் அகரவரிசை (Alphabet ), நிறுத்தல் குறிகள் (Punctuation), பொதுவான ஆங்கிலச் சொற்கள் (Common English Words), எண்கள் (Numbers), வேகப் பயிற்சி (Speed Drills) என்று ஒன்பது வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேம்பட்ட பயிற்சியில் ஆறு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. சிறப்புப் பாடங்கள் பயிற்சியில் ஏழு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
கட்டண அடிப்படையிலான பயிற்சியில் 16 வகையான பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் நாம் கட்டண அடிப்படையிலான பயிற்சியைத் தவிர்த்து பிற பயிற்சிகளை இலவசமாகப் பெற முடியும். இங்கு ஆங்கிலம், ஜப்பான், சீனம், கொரியன், போர்ச்சுக்கீசு உட்பட 26 மொழிகளிலான விசைப்பலகைகளில் பயிற்சி பெறமுடியும்.
தட்டச்சுப் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் http://www.typingweb.com/ எனும் இணையமுகவரிக்குச் சென்று தங்களது பயிற்சிகளைத் தொடரலாம்.